உள்ளூர் செய்திகள்

கோழியூர்

திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இங்கு சிவபெருமான் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இதற்கு காரணம் பிரம்மா இங்கு வந்தபோது சிவபெருமான் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை (வெள்ளைநிறம்), செம்மை (சிவப்புநிறம்), கருமை (கருப்புநிறம்), புகைமை (புகைநிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மையில் இருந்து மண்ணும், வெண்மையில் இருந்து தண்ணீரும், செம்மையில் இருந்து நெருப்பும், கருமையில் இருந்து காற்றும், புகையில் இருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். இப்படி பஞ்சபூதங்களையும் ஒன்றாக உள்ளடக்கி இங்கே உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்ற பெயரும் வந்தது. 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார். இத்தலத்தின் மற்றொரு சிறப்பு அம்பாள் காந்திமதியம்மன் சன்னதி கருவறைச் சுவர். யானையை அடக்கிய சேவலின் சிற்பம்தான் அந்த சிறப்பு. முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த கரிகால் சோழன் நகர்வலம் வந்தார். அப்போது அவர் வளர்த்த யானைக்கு மதம்பிடிக்கிறது. என்னசெய்வதென்று தெரியாத சூழலில் மக்கள் ஓடுகின்றனர் அச்சமயம் அவர் வளர்த்த சேவல் சூழலை அறிந்து யானையின் தலையின் மீது ஏறி கொத்தி அடக்குகிறது. இதன் வீரத்தை காலத்தால் அழியா வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக கரிகால் சோழன் இந்த சிற்பத்தை வடித்தார். இப்படி யானையை கோழி அடக்கிய வீரத்தின் அடையாளமாக உறையூருக்கு, 'கோழியூர்' என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளது. -நல்லவன்