ஆண்டாள் பாடியது போல் நல்ல மழை பொழியட்டும் - சொல்கிறார் காஞ்சி பெரியவர்
எல்லா சுவாமிக்கும் தநுஸ்(வில்) உண்டு. அந்த தநுஸுக்கு தனிப்பெயரும் உண்டு. பரமசிவன் கையில் இருப்பது 'பிநாகம்'. அதனால் அவருக்கு 'பிநாகபாணி' என்று பெயர். திரிபுர சம்ஹாரத்தில் அவர் மேருமலையை வில்லாக வளைத்தார். மகாவிஷ்ணுவுக்கு 'சார்ங்கபாணி' என்றொரு பேருண்டு. பலர் இந்தப் பேரை வைத்துக் கொள்கிறார்கள். சீரங்கம் (ஸ்ரீரங்கம்) மாதிரி சாரங்கம் என்று நினைத்துக் கொண்டு சாரங்கபாணி என்கிறார்கள். இதிலே ரங்கம் எதுவுமில்லை. 'சார்ங்கம்' என்பதே சரி. சாரங்கம் அல்ல. சார்ங்கம் என்பது மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும்வில். பொதுவாக, விஷ்ணு சங்கு, சக்ர, கதா, பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் என்று சொன்னாலும், சார்ங்கம் என்னும் வில் அவருக்கு முக்கியமானது. பஞ்சாயுத ஸ்தோத்திரத்தில் இந்த வில்லையும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. விஷ்ணு சகஸ்ரநாமத்தின் கடைசி ஸ்லோகத்திலும் இந்த சார்ங்கம் சொல்லியிருக்கிறது.''தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்'' நன்றாக மழை வர்ஷிக்கட்டும் (பெய்யட்டும்) என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கிறாள்.