சபரிமலையில் பூஜை செய்யும் தாழமண் தந்திரி குடும்பம்
சபரிமலை வழிபாட்டில், பூஜை முறைகளில் தாழமண் தந்திரிகள் எடுக்கும் முடிவு இறுதியானது. சபரிமலையில் 18 படி ஏறும் பக்தர்கள் இருமுடி கட்டி இருக்க வேண்டும். மற்றவர்கள் வடக்கு வாசல் வழியாக செல்லலாம். இருமுடி இல்லாமல் படியேறும் உரிமை தாழமண் தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பத்திற்கு மட்டுமே உண்டு.பம்பை நதிக்கரையிலுள்ள செங்கன்னுாரில் தாழமண் குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட இவர்கள் இங்கு வந்ததும், இவர்களுக்கு தாழமண் தந்திரி என பெயர் வந்ததும் சுவாரஸ்யமான கதை.கேரளாவை உருவாக்கிய பரசுராமர், கோயில்களில் பூஜை நடத்த தந்திரிகளை நியமிக்க விரும்பினார். ஆந்திராவை சேர்ந்த, வேதம் படித்த இரு பிராமணர்களை அழைத்து வந்தார். அவர்களை பரிசோதிக்க எண்ணி, ஆற்று வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு வருமாறு கூறினார். ஒருவர் நீரின் மீது நடந்து மறுகரைக்கு வந்தார். மற்றொருவர் வெள்ளத்தை தன் சக்தியால் கட்டுப்படுத்தி நடுவில் பாதை ஏற்படுத்தி கரையேறினார். பரவசம் அடைந்த பரசுராமர், நீரின் மேல் நடந்தவருக்கு தரணநல்லுார் தந்திரி என்று பெயரிட்டார் (தரணம் என்பது சோதனை. சோதனையை கடந்தவர்). நீரை கட்டுப்படுத்தி மறுகரைக்கு வந்தவருக்கு தாழமண் தந்திரி என்று பெயரிட்டார். பரசுராமர் ஆசியுடன் சபரிமலை பூஜை பொறுப்பை ஏற்றார் தாழமண் தந்திரி. தற்போது இவரது குடும்பத்தில் நான்கு தந்திரிகள் உள்ளனர். மூத்த இருவரும் பூஜை செய்யவில்லை.கண்டரரு ராஜீவரரு, கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு முறை பூஜை செய்வர். ஆண்டுதோறும் ஆவணி முதல் நாளில் இவர்கள் பொறுப்பேற்பர்.