உள்ளூர் செய்திகள்

நன்றாக படிக்கணுமா....

மகரிஷி வசிஷ்டர் ஞானம் பெற ஆர்வம் கொண்டு, பல தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அவரது விருப்பத்தை அறிந்த பிரம்மா, அறச்செயல் ஒன்றைச் செய்தால் பலன் பத்தாக பெருகும் தலம் ஒன்றை அவருக்குக் காட்டி, அங்கு சென்றால் ஞானம் கிடைக்கும் என்றார். வசிஷ்டரும் அத்தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தல இறைவனின் மகிமையை அறிந்த இந்திரன், அத்தலம் வந்து தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவனது பாவமும் தீர்ந்தது. இந்திரனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டதால் அந்த சிவன், 'குற்றம் பொறுத்த நாதர்' என்று பெயர் பெற்றார். இத்தல அம்பிகைக்கு கோல் வளைநாயகி என்று பெயர். மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ., தூரத்திலுள்ள தலைஞாயிறு தலத்தில் இவர் அருளுகிறார். தேவாரப் பாடல் பெற்ற தலம் இது. இத்தலம் 'கருப்பறியலூர்' என்று தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. இங்கு சென்று வந்தால் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் சிறப்பாக படிப்பர் என்பது ஐதீகம். கல்வி விருத்திக்காக சம்பந்தர் 11 பாடல்களை, இங்கு வந்து பாடியுள்ளார்.