சுவாமி முன் கால் நீட்டியவள்
அவ்வைப்பாட்டி ஒருமுறை கயிலாயத்திற்கு நடந்தே சென்றாள். களைப்பு தாங்காமல், சிவபார்வதியின் முன் கால் நீட்டி அமர்ந்தாள். சுவாமி அதுபற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், தேவிக்கோ கோபம் வந்துவிட்டது.சிவபெருமானிடம், ''சுவாமி! அகில உயிர்களுக்கும் தலைவரான உங்களை நோக்கி இந்த மூதாட்டி கால்நீட்டியிருக்கிறாளே!'' என்று சிடுசிடுத்தாள். சுவாமி அவளிடம், ''பார்வதி! இதுபற்றி நீயே கேட்டுவிடு,'' என்று பதிலளித்தார்.உமையவளும், ''அவ்வையே! நீ செய்வது சரிதானா? சுவாமிக்கு நேராக காலை நீட்டியிருக்கிறாயே!'' என்றாள்.அவ்வைப் பாட்டியோ, ''தேவி! என் அப்பன் சிவன் எத்திசையில் இல்லை என்று சொல்! அத்திசையில் காலை நீட்டிக் கொள்கிறேன்,'' என்று பவ்யமாக பதில் கொடுத்தாள். உமையவள் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தாள். எங்கும் சிவனின் அருள் உருவம் அம்பிகையின் கண்களுக்குத் தெரிந்தது. இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்த ஈசனே விளையாடிய நாடகம் இதுவென்பதை தேவி உணர்ந்தாள்.