லாரியை "பிரேக்டவுண் ஆக்கியவர்
1963ல், ராமேஸ்வரத்தில் சங்கரமடம் கட்டப்பட்டது. அங்கு ஆதிசங்கரர் மற்றும் அவரது நான்கு சீடர்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் இருந்து சலவைக்கல்லில் செய்யப்பட்ட சிலைகள் லாரியில் ஏற்றப்பட்டு வந்து கொண்டிருந்தன. திண்டிவனத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடையிலுள்ள அச்சரப்பாக்கம் வந்த போது, லாரி பிரேக்டவுன் ஆகிவிட்டது. புராணத்தில், முப்புரம் எனப்படும் மூன்று பறக்கும் கோட்டைகளை எரிக்க சிவபெருமான் தேரில் புறப்பட்ட போது, பிள்ளையார் பூஜை செய்யாமலே சென்றார். பிள்ளையார் பூஜை செய்த பிறகே, எந்தச்செயலையும் துவங்குவோம் என ஒட்டுமொத்த தேவர்களும் தீர்மானித்திருந்தனர். சிவனே அதை மீறியதால், தந்தையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே என்ற அடிப்படையில், அவரது தேரின் அச்சை முறியும்படி செய்துவிட்டார் விநாயகர். அந்த இடம் 'அச்சிறுப்பாக்கம்' எனப்பட்டு, தற்போது அச்சரப்பாக்கமாக திரிந்துள்ளது.சிலைகள் செல்வதில் தடை ஏற்பட்டமைக்கு, விநாயகர் பூஜை செய்யாதது காரணமாக இருக்கலாம் என்ற அடிப்படையில், அங்குள்ள விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தனர். அதன்பிறகு லாரி கிளம்பியது. பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்து முடிந்தது.