கந்தசஷ்டி விழா காரணம்
திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழா நடக்கிறது. முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததாக ஒரு வரலாறு இருந்தாலும், வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக ஐப்பசி மாத அமாவாசையன்று ஒரு யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். முருகன் அவதார நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அதற்காக முருகனின் அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் இருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, விரதம் இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். அவர் அருள் செய்த நாளே கந்தசஷ்டி என்கின்றனர்.