உள்ளூர் செய்திகள்

கண்ணா! வருக வருக!

* மனமே! கருமைநிற வண்ணனை துதித்தால் செல்வமும், பெருமையும், புகழும் உன்னைத் தேடி வரும். * கண்ணனை வணங்கினால் இப்பூவுலகம் பொன்னுலகம் ஆகும். தீமைகள் தேய்ந்து எங்கும் நன்மை பெருகும். அதனால், பூமிதேவியின் தலைவனான கண்ணபெருமானின் புகழை பாமாலையாகப் பாடுங்கள்.* கண்ணனின் அருளால் அசுர குணங்கள் நம்மை விட்டு அகலும். இருளையும், கலிதோஷத்தையும் போக்குபவன் அவன். நல்லவர்கள் அவனருளால் நல்வாழ்வு பெற்று மகிழ்வர். * பல பெயர்களால் வழங்கப்படும் தெய்வமே! குறைவில்லா ஒளிசக்தியே! கோவிந்தனே! சராசரம் அனைத்தையும் காப்பவனே! எளியேனின் அல்லல் களைந்து மகிழ்ச்சியை நிலைத்திடச் செய்வாயாக. * கண்ணபெருமானே! உன் திருவடிகளை வணங்கினோருக்கு ஒப்பில்லாத உயர் வாழ்வும், கல்வியும், வீரமும், புவியாளும் திறமும், தவறாத தர்மமும் வழங்கிடுவாய். கமலத்தில் வாழும் திருமகளோடு மகிழ்பவனே! உன்னை வரவேற்று மகிழ்கிறோம். உன்னருளை எம் மீது பொழிவாயாக.- பாரதியார்