சுவாமிக்கும் புதுத்துணி அணிவியுங்க!
* தீபாவளி அன்று நாம் மட்டும் எண்ணெய் தேய்த்துக் கொள்வது, புது துணிகள் கட்டிக் கொள்வது என்பதோடு நிற்காமல், ஏழைகளுக்கும் எண்ணெய், சீயக்காய், புதிய துணிகள் வழங்க வேண்டும். கோயிலிலுள்ள அறுபத்தி மூவர் உட்பட அனைத்து மூர்த்திகளுக்கும் தைலம் சார்த்தி, புது வஸ்திரம் அணிவித்தும் கொண்டாட வேண்டும்.* நம் ஊர்க் கோயிலில் சுவாமியின் வஸ்திரம் சுத்தமாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டால், நம் மனசின் அழுக்கு போய்விடும்.* தீபாவளியன்று துணியும், உடம்பும், வீடும் புதுசாக இருந்தால் போதாது. இதற்கும் மேலாக நம் மனமும் புதிதாக அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். குணமும், உடலும் இணைந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்களைச் செய்ய வேண்டும்.* தினமும் மனதாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்க வேண்டும். -காஞ்சிப்பெரியவர்(இன்று தீபாவளி)