இதோ... நேர்மையின் சாட்சி!
நாயகம், 'அல் அமீன்' என்ற பட்டத்தை மக்கா மக்களிடம் இளமையிலேயே பெற்றிருந்தார். 'அல் அமீன்' என்றால் 'நம்பிக்கைக்கு உரியவர்' என்று பொருள். அந்தக் காலத்தில் மக்காவாசிகளிடம் இப்படி ஒரு பெயரைப் பெறுவது சுலபமான காரியமல்ல. ஏனெனில் அவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். அப்படியெனில் நாயகம் எந்தளவுக்கு நேர்மையாளராகத் திகழ்ந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.அவர் சன்மார்க்கத்தைப் பிரசாரம் செய்தபோது அதைக் கைவிடுமாறு குரைசி காபிர்கள் வேண்டினர். பொன்னாலும் பொருளாலும் அதிகார பீடத்தாலும் ஆசை வார்த்தை காட்டினர். ஆனால் நாயகம், “என் ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையுமே கொண்டு வந்து தருவதானாலும் என் சன்மார்க்க பிரசாரத்தை கைவிட மாட்டேன்,” என பதிலளித்தார்.அவரது நேர்மைக்கு இன்னொரு உதாரணம்... பொதுவாக, போர்க்களத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் போர் நடவடிக்கையில் என்ன முறைகளைப் பிரயோகம் செய்திருந்தாலும் அது சரியே என்று வாதிடுவர். மற்றவர்களும் அவர்கள் கையாண்ட முறை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வெற்றி பெற்றதை பாராட்டவே செய்வர். ஆனால், நாயகம் போர்க்களத்திலும் நேர்மையைப் பின்பற்றினார். தோல்வியே கிடைக்கும்என்றாலும் கூட நேர்மையை விட்டு வழுவாத பண்பாளராகத் திகழ்ந்தார்.மதீனா சமுதாயத்தின் ஆரம்ப நாட்களில் ஒரு சமயம் காபிர்களில் ஒரு கூட்டத்தார், நாயகத்திடம் வந்து, மற்ற காபிர்களின் கூட்டத்தாரோடு போராடுவதில் அவர்களுக்குத் துணையாக இருப்பதாகக் கூறினர். 'நம் பகைவர்களின் பகைவர்கள் நம் நண்பர்கள்' என்ற கொள்கையை நாயகம் ஏற்கவில்லை. அவர்களது உதவியைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவர்களது உதவியை ஏற்றிருந்தால், மிக உதவியாய் இருந்திருக்கும். ஆனாலும் அதை ஏற்க மறுத்ததே நாயகத்தின் நேர்மை.