உள்ளூர் செய்திகள்

அக்கம் பக்கம்

வெற்றிக்கு வேட்டு!

'நல்ல வாய்ப்பை கெடுத்து விடுவார் போலிருக்கிறதே...' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., ரமேஷ் பிதுரி குறித்து, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர்.டில்லியில், முதல்வர் ஆதிஷி தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பிப்., 5ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் ஆதிஷி, டில்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில் ரமேஷ் பிதுரி களம் இறக்கப்பட்டுள்ளார். ரமேஷ் பிதுரி வாய் துடுக்கு மிக்கவர். சமீபத்தில் அவர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டில்லியில் உள்ள சாலைகளை, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவின் கன்னத்தை போல மாற்றுவோம்...' என்றார்.இந்த பிரச்னை ஓய்வதற்குள், 'டில்லி முதல்வர் ஆதிஷி, தன் தந்தை பெயரை அடிக்கடி மாற்றுகிறார்...' என, ரமேஷ் பிதுரி பேசினார். இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், வேறு வழியின்றி, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்.இந்த இரண்டு விவகாரத்தையும் மையமாக வைத்து, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், டில்லியில் பிரசாரம் செய்து வருகின்றனர். 'பெண்களை நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் ரமேஷ் பிதுரி தான், பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர். இப்படிப்பட்டவருக்கு பெண்கள் ஓட்டு போடலாமா...' என, அவர்கள் கேட்கின்றனர். பா.ஜ.,வினரோ, 'ரமேஷ் பிதுரியின் பேச்சு, நம் வெற்றிக்கு வேட்டு வைத்து விடும் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி