அழியும் அடையாளம்!
'தெலுங்கானா தனி மாநிலம் உருவாவதற்கே நான் தான் காரணம்; ஆனால், காலப்போக்கில் அதையெல்லாம் மறக்கடித்து விடுவர் போலிருக்கிறதே...' என, கவலைப்படுகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ்.தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து, தெலுங்கானாவை தனியாக பிரித்து, தனி மாநிலம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், சந்திரசேகர ராவ்.இதற்கு பரிசாக, 2014 மற்றும் 2019 என இரண்டு சட்டசபை தேர்தல்களில் அவரை, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினர், தெலுங்கானா மக்கள். ஆனால், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வரானார். தெலுங்கானா மக்களின் ஆபத்பாந்தவன், ஏகபோக சக்கரவர்த்தி என்ற சந்திரசேகர ராவின் இமேஜை உடைப்பதற்கான முயற்சியில் ரேவந்த் ரெட்டி இறங்கியுள்ளார். மொழி சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். தெலுங்கானாவில் செயல்படும் மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், தெலுங்கு மொழி கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட சந்திரசேகர ராவ், 'கொஞ்ச நாட்களுக்கு ஆட்சியில் இல்லையென்றால்,நம் அடையாளத்தையே அழித்து விடுவர் போலிருக்கிறதே...' என, கண்ணீர் வடிக்கிறார்.