சங்கு ஊதிடுவாங்களோ?
'ஒரு சிலை உடைந்ததை சர்வதேச பிரச்னையாக்கிகதற விடுகின்றனரே...' என புலம்புகிறார், மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமானஏக்நாத் ஷிண்டே.மராட்டிய மன்னர் சத்ரபதிசிவாஜியை பெருமைப்படுத்தும் வகையில், மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துார்க் மாவட்டத்தில் கடந்தாண்டு சிலை நிறுவப்பட்டது. மாநில அரசின் ஏற்பாட்டில் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைத்தார். சமீபத்தில் சிந்துார்க் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை மற்றும் காற்று காரணமாக, அந்த சிலை கீழே விழுந்து நொறுங்கியது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, அரசியலாக்கி விட்டன.'மராட்டிய மண்ணின் கவுரவத்துக்கு அடையாளமேசிவாஜி தான். அவரது சிலையைக் கூட ஒழுங்காக நிறுவாமல், அவமானப்படுத்தி விட்டனர்...' என, தினமும் போராட்டங்கள் நடத்தி, 'கிடுகிடு'க்க வைக்கின்றனர். மஹாராஷ்டிர மக்களுக்கு சத்ரபதி சிவாஜி, கடவுள்போன்றவர். இதனால் இந்த விவகாரத்தில்அதிக, 'ரிஸ்க்' எடுக்க விரும்பாத ஏக்நாத் ஷிண்டே, 'சிலை விழுந்ததற்காக, 100 முறை மன்னிப்புகேட்கிறேன்...' என்றார். பிரதமர் மோடியும், இதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் இதை எளிதில் விடுவதாக தெரியவில்லை. 'சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்திலா இந்த சம்பவம் நடக்க வேண்டும். இதை வைத்தே, தேர்தலில் நமக்கு சங்கு ஊதி விடுவர் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார் ஏக்நாத் ஷிண்டே.