தேர்தலில் எதிரொலிக்குமா?
'இவர், ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போய், எக்குத்தப்பாக பேசி விடுகிறார். அதை சமாளிப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளிவிடுகிறது...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குறித்து புலம்புகின்றனர், அந்த கட்சியின் மூத்த தலைவர்கள்.சில மாதங்களுக்கு முன், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்ற ராகுல், அங்குள்ள பல்கலை மாணவர்கள், பத்திரிகையாளர்கள், தனியார் அமைப்பினருடன்கலந்துரையாடினார். அப்போது, வெளியுறவுத்துறை, உள்நாட்டில்நடக்கும் அரசியல், உள்நாட்டில் செயல்படும் அமைப்புகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்; அது, இங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பா.ஜ., சார்பில் ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துபோராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போது மீண்டும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார், ராகுல்.அமெரிக்கா சென்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் நம் நாட்டின் ஜாதி, மதம், மொழி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். சீனா விவகாரம் குறித்தும் பேட்டி அளித்தார். இந்த விவகாரம், நம் நாட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சீக்கிய அமைப்புகள், பா.ஜ.,வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைப் பார்த்த காங்., மூத்த தலைவர்கள்,'இன்னும் சில நாட்களில் ஹரியானாவில் சட்டசபைதேர்தல் நடக்கப் போகிறது. இப்போது சீக்கியர்விவகாரம் பற்றி பேசியிருக்கக் கூடாது. இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கலாம்...' என, கவலைப்படுகின்றனர்.