உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  முட்டிக் கொள்ளும் பா.ஜ., - சிவசேனா!

 முட்டிக் கொள்ளும் பா.ஜ., - சிவசேனா!

'நம் கூட்டணி இன்னும் எத்தனை நாளைக்கு தாங்கும் என்று தெரியவில்லையே...' என கவலைப்படுகின்றனர், மஹாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி கட்சியினர். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது; துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இங்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும், மும்பை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில், பா.ஜ.,வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பெரும்பாலான மாநகராட்சிகளில், இந்த கூட்டணியே வெற்றி பெற்றது. இருந்தாலும், மேயர் உள்ளிட்ட பதவிகளை பங்கிட்டுக் கொள்வதில், இரு தரப்புக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. இதனால் கடுப்பான, பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் கணேஷ் நாயக், 'சிவசேனாவுடனான கூட்டணி தேவையில்லாதது. பா.ஜ., தனித்து போட்டியிட்டிருந்தாலே, பல மாநகராட்சிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். கட்சி மேலிடம் அனுமதி கொடுத்தால், சிவசேனாவை பல பகுதிகளில் ஒழித்துக்கட்டி விடுவேன்...' என்றார். இவரது பேச்சு, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவசேனா கட்சி தலைவர்கள், 'கூட்டணியே வேண்டாம்...' என கொந்தளிக்கின்றனர். 'ஆளுங்கட்சி கூட்டணி, பொருந்தா கூட்டணியாகி விட்டது...' என, எதிர்க்கட்சியினர் கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !