UPDATED : அக் 05, 2026 12:00 AM | ADDED : அக் 04, 2026 07:22 PM
‘கூட்டணி கட்சித் தலைவரை மறைமுகமாக விமர்சிப்பது சரியல்ல...’ என, பீஹார் மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான சாம்ராட் சவுத்ரி பற்றி கூறுகின்றனர், ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள். பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் பா.ஜ., – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரிடமிருந்து, கடந்த ஏப்ரலில் சாம்ராட் சவுத்ரி முதல்வர் பதவியை பெற்றார். சமீபத்தில் பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சாம்ராட் சவுத்ரி பேசுகையில், ‘இதற்கு முன் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தபோது, என் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்த பட்டியலுடன், முதல்வரை சந்திக்க சென்றேன். ‘ஐந்து முறை சென்றும், அவரை சந்திக்க முடியவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருப்பவராலேயே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்றால், சாதாரண மக்கள் எப்படி சந்திக்க முடியும்? ‘அதனால் தான், நான் முதல்வராக பதவியேற்றதும், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதல்வரிடம் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கான சேவை மையங்களை ஏற்படுத்த உத்தரவிட்டேன். கடந்த சில மாதங்களில் மட்டும் 8.50 லட்சம் மக்கள், இந்த மையங்களில் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்...’ என்றார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, ‘முதல்வர், அவரை பற்றி பெருமையாக பேசட்டும்; அதற்காக, எங்கள் தலைவரை குறை கூறுவது நியாயமா...?’ என, கொதிக்கின்றனர்.