16 அடி பாய்வாரா லோகேஷ்?
'ஹைதராபாதை எப்படி, தகவல் தொழில்நுட்ப நகரமாக என் தந்தை மாற்றிக் காட்டினாரோ, அதேபோல், ஆந்திராவை தொழில்நுட்ப வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்...' என சபதம் எடுத்துள்ளார், அம்மாநில அமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலருமான நர லோகேஷ். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்தவர் தான், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு . அப்போது, சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஹைதராபாதில் முதலீடு செய்ய வைத்து, அந்த நகரத்தை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றியதில், சந்திரபாபு நாயுடு முக்கிய பங்கு வகித்தார். இப்போது ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகி விட்டது. இதனால், ஆந்திராவிலும் சர்வதேச நிறுவனங்களின் கிளை அலுவலகங்களை திறப்பதற்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். தற்போது அவருக்கு வயதாகி விட்டதால், அந்த பொறுப்பை, தன் மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான நர லோகேஷிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, 'என் தந்தை எட்டடி பாய்ந்தால், நான் 16 அடி பாய்வேன்...' என்கிறார், நர லோகேஷ்.