தாக்குப்பிடிக்க முடியுமா?
'நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்பது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறது...' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள். மேற்கு வங்கம், 15 ஆண்டுகளுக்கு முன் வரை, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கியது. கடந்த, 1977ல் இருந்து, இங்கு இடதுசாரி கட்சிகளின் ஆட்சி தான் நடந்தது. அவர்களை வீழ்த்தி, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானார் மம்தா பானர்ஜி. இந்திய அரசியலில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றம், ஒரு அரசியல் புரட்சியாகவே பார்க்கப்பட்டது. அதன்பின், தொடர்ச்சியாக நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், மம்தாவுக்கே வெற்றி கிடைத்தது. இந்நிலையில், அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மீண்டும் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மகுடம் சூடுவதற்கு தயாராகி வருகிறார், மம்தா. 'ஆனால், கள நிலவரம், அவர் எதிர்பார்ப்பது போல் இருக்காது' என்கின்றனர், இதர கட்சிகளின் அரசியல்வாதிகள். மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், ஆளும் கட்சியினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை, மம்தாவுக்கு பெரும் தலைவலியாக உள்ளன. 'தொடர்ச்சியாக, 15 ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இருப்பதால், மக்களிடையே ஒரு சலிப்புத் தன்மை உருவாகி விட்டது. மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களின் மனநிலைக்கு எதிராக, நாம் தாக்குப்பிடிப்பது சிரமம் தான்...' என்கின்றனர், திரிணமுல் கட்சியினர்.