உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  இரண்டு பேருக்கும் வாழ்த்து!

 இரண்டு பேருக்கும் வாழ்த்து!

'கில்லாடியான அரசியல்வாதி தான்; இல்லையென்றால் இத்தனை காலம் அரசியலில் தாக்குப் பிடித்திருக்க முடியுமா...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாரை கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள பிற கட்சியினர். பீஹாரில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வர் பதவியில் இருந்து வரும் நிதிஷ் குமார், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்; விரைவில், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான, பா.ஜ.,வைச் சேர்ந்த யாராவது ஒருவர் முதல்வராகலாம் என பேசப்படுகிறது. இந்நிலையில், பீஹார் தலைநகர், பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீஹார் மாநில பா.ஜ., தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சாம்ராட் சவுத்ரி அருகில் சென்ற நிதிஷ் குமார், அவரது கையை அழுத்திப் பிடித்து, 'இனி எல்லாம் உங்கள் கையில் தான்; வாழ்த்துக்கள்...' என்றார். அப்படியே, அவருக்கு அருகில் நின்றிருந்த, மற்றொரு துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, விஜய் குமார் சின்ஹாவிடமும் சென்ற நிதிஷ், அவரது தோளையும் தட்டி, 'வாழ்த்துக்கள்...' என கூறிவிட்டு நகர்ந்தார். இதை பார்த்த, அங்கிருந்த மற்ற தலைவர்கள், 'ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் வாழ்த்து தெரிவித்து, முதல்வர் பதவிக்கு சண்டையை மூட்டி விட்டு செல்கிறாரே...' என, குழப்பத்துடன் முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !