ஆட்சிக்கு எதிராக சதியா?
'தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது என்ன சோதனை...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.தொடர்ச்சியாக மூன்று சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ள மம்தா, நான்காவது வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கடந்த தேர்தலில், பா.ஜ., கொடுத்த கடுமையான நெருக்கடியை மீறி வெற்றி பெற்ற மம்தாவுக்கு, அடுத்த தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என்பது இப்போதே தெரிந்து விட்டது.கடந்தாண்டு கொல்கட்டாவில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்; இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக மாநிலம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன.நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கும் மம்தா ஆளானார். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த பிரச்னை தலை துாக்கியுள்ளது. சமீபத்தில், கொல்கட்டாவில் சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 'விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு என் அரசியல் எதிரிகள் சதி திட்டம் தீட்டுகின்றனர். அதன் ஒரு பகுதி தான் இந்த சம்பவம்...' என, புலம்புகிறார் மம்தா.