உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘விமர்சனம் தொடரும்!’

‘விமர்சனம் தொடரும்!’

‘எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லையே...’ என்ற ஏமாற்றத்தில் இருக்கின்றனர், பீஹார் மாநில பா.ஜ.,வினர். பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில், பா.ஜ., – ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர், இம்மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். இவர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்தாண்டு பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், கடந்த ஆகஸ்டில் பாங்கிபூர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரசாந்த் அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து, சாம்ராட் சவுத்ரியையும், அவரது அரசையும் பிரசாந்த் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரசாந்தும், சாம்ராட் சவுத்ரியும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருவரும் கைகுலுக்கியதுடன், அருகருகில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ‘பிரசாந்தும், சாம்ராட் சவுத்ரியும் நண்பர்களாகி விட்டனர்...’ என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், பிரசாந்த் இதை திட்டவட்டமாக மறுத்தார். ‘பொது நிகழ்ச்சியில் நாகரிகம் கருதி சாம்ராட் சவுத்ரியுடன் பேசினேன். மற்றபடி, அவரது அரசின் குறைபாடுகளை தொடர்ந்து விமர்சிப்பேன்...’ என்கிறார், பிரசாந்த் கிஷோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ