உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கெஜ்ரிவாலுக்கு இது தேவையா?

கெஜ்ரிவாலுக்கு இது தேவையா?

'எதற்கு இவர் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குகிறார்...' என, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி, அவரது கட்சியினரே எரிச்சலுடன் பேசுகின்றனர். டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்த பின், சில மாதங்கள் அமைதியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சமீபகாலமாக மீண்டும் அறிக்கை அரசியலை கையில் எடுத்து உள்ளார். பா.ஜ.,வையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், 'குஜராத் மாடல், குஜராத் மாடல் என பா.ஜ.,வினர் பெருமையடிக்கின்றனர். ஆனால், குஜராத்தில் நிலைமையே வேறாக இருக்கிறது.குஜராத்தில் கடந்தாண்டு நடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை; இதுதான் குஜராத் மாடலா...' என, தெரிவித்திருந்தார். இது, பா.ஜ.,வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'டில்லியில், 10 ஆண்டுகளாக நடந்த ஆம் ஆத்மி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருந்தது. அதனால்தான், கடந்த தேர்தலில் மக்கள், அவர்களை வீட்டுக்கு அனுப்பினர். 'குஜராத் மாடல் பற்றி பேசுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு என்ன தகுதியிருக்கிறது? மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், இப்படித்தான் ஏதாவது பேசிக் கொண்டிருப்பர்...' என, சூடாக பதிலடி கொடுத்தனர். ஆம் ஆத்மி கட்சியினரோ, 'இதெல்லாம் கெஜ்ரிவாலுக்கு தேவைதானா...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !