உணர்ச்சிகரமான காட்சி!
'அரசியல்வாதிகளின் அட்டகாசத்துக்கு அளவே இல்லையா...' என, கொதிக்கின்றனர், டில்லியில் வசிக்கும் மக்கள்.இங்கு, முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் வழக்கில் சிக்கியதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின், ஆதிஷி முதல்வரானார். கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, டில்லியில் அவருக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. டில்லி, நாட்டின் தலைநகர் என்பதால், இங்கு அரசு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அந்த பங்களாவில் ஆதிஷி குடியேறினார். அனுமதி பெறாமல் ஆதிஷி, தானாகவே அந்த பங்களாவில் குடியேறியதாகக் கூறி, அவரை அங்கிருந்து பொதுப்பணித் துறை வெளியேற்றியது.இதன்பின், முறையான அனுமதியுடன், ஆதிஷிக்கு அந்த பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டது. விதிகளின்படி, ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் பங்களாவில், சம்பந்தப்பட்டவர்கள் குடியேற வேண்டும்.ஆனால், ஆதிஷி அந்த பங்களாவுக்கு செல்லவில்லை. இதையடுத்து, அந்த பங்களா ஒதுக்கீட்டை பொதுப்பணித் துறை சமீபத்தில் ரத்து செய்தது. ஆத்திரம் அடைந்த ஆதிஷி, 'முதல்வருக்கான மரியாதையே இல்லாமல், என் பங்களாவை பறித்து விட்டனர்...' என, கண்ணீர் வடித்தார். டில்லி மக்களோ, 'சினிமாவில் கூட இப்படி ஒரு உணர்ச்சிகரமான காட்சியைப் பார்த்திருக்க முடியாது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.