உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  வதந்தி பரப்பும் எதிரிகள்!

 வதந்தி பரப்பும் எதிரிகள்!

'அரசியலை விட்டே வலுக்கட்டாயமாக விரட்டி அடித்து விடுவர் போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார். நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான நிதிஷ் குமாருக்கு, 74 வயதாகிறது. அரசியலில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், 'நிதிஷ் குமார் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்...' என, அவரது அரசியல் எதிரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அவர் மீதான விமர்சனங்கள் குறைந்திருந்தன. கடந்த சில நாட்களாக மீண்டும் விமர்சனங்கள் எழத் துவங்கியுள்ளன. 'நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 2027ல் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நிதிஷ் குமார் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளார்...' என, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. நிதிஷ் குமார் ஆதரவாளர்களோ, 'தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவர். பாரத ரத்னா விருதும் அப்படித் தான். ஆனால், எங்கள் தலைவர் இன்னும் அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார். அவரது அரசியல் எதிரிகள் தான், இது போன்ற வதந்திகளை பரப்புகின்றனர்...' என, கொந்தளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ