குறுக்கு வழியில் ஆட்சியா?
'தேவையில்லாமல் எங்கள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த மாநில பா.ஜ.,வினர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில், சமாஜ்வாதி தோல்வி அடைந்துள்ளது. இதனால், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க, அகிலேஷ் யாதவ் காய் நகர்த்தி வருகிறார். உ.பி., - பா.ஜ.,வில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், துணை முதல்வர்கள் பிரஜேஸ் பதக், கேசவ் பிரசாத் மயூரா ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில், முதல்வர் ஆதித்யநாத், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அப்போது அகிலேஷ் யாதவ், 'முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க் களில் , 100 பேரை யார் அழைத்து வருகின்றனரோ, அவர்களை எங்கள் கட்சி ஆதரவுடன் முதல்வராக்கி காட்டுகிறேன். பிரஜேஸ் பதக்கும், கேசவ் பிரசாத் மயூராவும் இந்த சலுகையை பயன்படுத்தினால் நல்லது...' என்றார். இதைக் கேட்டு கடுப்பான உ.பி., மாநில பா.ஜ.,வினர், 'எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தலையிடுவதற்கு அகிலேஷுக்கு என்ன தகுதி இருக்கிறது. குறுக்கு வழியில் ஆட்சியை அபகரிக்க நினைக்கும் அவரது எண்ணம் நிறைவேறாது...' என்கின்றனர்.