உண்மை பேசினால் தப்பா?
'கட்சி நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு அறிவுரை கூறியுள்ளனர், அவரது ஆதரவாளர்கள். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீப காலமாக, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷின் தலைமைக்கு சவால் விடும் வகையில், கட்சி நிர்வாகிகள் சிலர் செயல்படுவது, அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. சமீபத்தில், இவரது கட்சியின் எம்.எல்.ஏ., பூஜா பால், சட்டசபையில் பேசுகையில், 'உ.பி., ரவுடிகளின் கூடாரமாக இருந்தது. இப்போது நிலைமை மாறி விட்டது . குற்றவாளிகளை முதல்வர் யோகி ஒடுக்கி விட்டார். முழு மாநிலமும் அவரை நம்பிக்கையுடன் பார்க்கிறது...' என்றார். பூஜாவின் இந்த பேச்சை, சட்டசபையில் இருந்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர்; ஆனால், சமாஜ்வாதி கட்சியினரின் முகங்கள் இருண்டு விட்டன. 'கட்சிக்குள்ளேயே கலகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்தால், அப்புறம் உங்களுக்கு மரியாதையே இருக்காது...' என, அகிலேஷிடம் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து, கட்சியில் இருந்து பூஜாவை அதிரடியாக நீக்கினார், அகிலேஷ் யாதவ். பா.ஜ.,வினரோ, 'பூஜா உண்மையைத்தானே பேசினார்; அகிலேஷுக்கு ஏன் எரிச்சல் வருகிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.