தேவையா இந்த பதவி?
'முதல்வர் பதவி என்பது அவ்வளவு சுலபமான விஷயமாக இருக்காது போலிருக்கிறதே...' என புலம்புகிறார், உத்தரகண்ட் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான புஷ்கர் சிங் தாமி.கடந்த 2021ல் உத்தரகண்ட் பா.ஜ.,வில் கடுமையான அரசியல் குழப்பம் நிலவியது. முதல்வர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர். சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக புஷ்கர் சிங் தாமி, முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இதன்பின், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றும், முதல்வர் வேட்பாளரான புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். ஆனாலும், பா.ஜ., மேலிடம் அவர் மீது நம்பிக்கை வைத்து, அவரையே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தியது.அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றார். முதல்வர் பதவியில் மீண்டும் அமர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாநில அரசில் எட்டு அமைச்சர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதனால், 58க்கும் மேற்பட்ட துறைகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமியே கவனித்து வருகிறார். கடும் பணிச்சுமையால் தவித்து வரும் அவர், அமைச்சரவையை விரிவுபடுத்த அனுமதிக்கும்படி அடிக்கடி டில்லி சென்று, பா.ஜ., தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால், பா.ஜ., தலைமையிடம் இருந்து இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், 'இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் இந்த முதல்வர் பதவி தேவையா...' என, தன் ஆதரவாளர்களிடம் புலம்புகிறார், புஷ்கர் சிங் தாமி.