பதவி முக்கியம்!
'முதல்வர் பதவியில் அமராமல் ஓயப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி கிண்டலாக பேசுகின்றனர், அங்குள்ள சக அரசியல்வாதிகள். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால், எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர். நிலைமை இப்படி யே போனால், கட்சி காணாமல் போய் விடும் என்பதை உணர்ந்த அகிலேஷ் யாதவ், அதிரடியாக களத்தில் குதித்துள்ளார். வரும், 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, உற்சாகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்த கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடவும் முடிவு செய்துள்ளார். அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை முன்வைத்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த சக அரசியல்வாதிகள், 'பதவியில் இருந்தால் தான் மக்கள் மட்டுமல்ல, கட்சி தொண்டர்கள் கூட நம்மை மதிப்பர் என்ற உண்மை அகிலேஷுக்கு புரிந்து விட்டது; அதனால் தான், அதிரடியாக களத்தில் இறங்கி விட்டார்...' என்கின்றனர்.