'பா.ஜ.,வினர் விமர்சிப்பர் என்று தெரிந்தும், தொடர்ந்து அதையே செய்கிறாரே...' என, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பற்றி, கவலையுடன் கூறுகின்றனர், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள். 'நாட்டில் முக்கியமான பிரச்னைகள் நடக்கும் போதும், பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போதும், ராகுல் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்...' என, பா.ஜ.,வினர் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், ராகுல் இதை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. தற்போது, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது. வரும், 19ம் தேதி தான், இந்த கூட்டத்தொடர் முடிவடைகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு, அடுத்த வாரம் ராகுல் செல்ல இருப்பதாக, காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுவது, ஜெர்மன் அமைச்சர்களை சந்திப்பது போன்ற நிகழ்ச்சிகளில் ராகுல் பங்கேற்க உள்ளார். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள, பா.ஜ.,வினர், 'நாட்டில் என்ன பிரச்னை நடந்தாலும், ராகுலுக்கு கவலையில்லை... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியில் இருப்பவர், பார்லிமென்ட் நடக்கும்போது சபையில் இருக்க வேண்டாமா... லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை விட, 'உலக நாயகன்' என்ற பட்டம் தான், இவருக்கு பொருத்தமாக இருக்கும்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.