உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

'என்னாச்சு; திடீரென மீண்டும் பரபரப்பை கிளப்பி விடுகிறாரே...' என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி பற்றி, அவரது கட்சிக்காரர்களே ஆச்சரியத்துடன் பேசுகின்றனர். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஏற்கனவே முதல்வராக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, கடந்த சில தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தேர்தல்களில் மாயாவதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், பெயரளவுக்கு தான், அவர்களது பிரசாரம் இருக்கிறது.'மாயாவதி மீது ஏராளமான ஊழல் வழக்குகள் இருப்பதால், மத்திய அரசுக்கு பயந்து தேர்தல்களில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருக்கிறார்...' என, மற்ற கட்சியினர் கூறி வந்தனர். இந்த நிலையில் தான், டில்லியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர்களை நிறுத்தியுள்ள மாயாவதி, தன் கட்சி தொண்டர்களுக்கு மனம் திறந்த மடல் எழுதியுள்ளார். அதில், 'டில்லியில் நம் கட்சிக்கு வெற்றி தேடி தருவது தான், என்னுடைய, 69வது பிறந்த நாளுக்கு நீங்கள் தரும் பரிசு...' என, உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.இதைப் படித்த அவரது கட்சித் தொண்டர்கள், 'கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து, தேர்தல் களத்தில் கடுமையாக பிரசாரம் செய்தால், அரசியல் களத்தில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம்...' என, தங்கள் தலைவி பற்றி கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !