‘சம்பந்தமின்றி உளறுவது ஏன்?’
‘தன் இருப்பை காட்டி கொள்வதற்காக சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார்...’ என, மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமி பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர். கர்நாடகாவில், முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், கட்சியினர் மத்தியில் பேசிய சிவகுமார், ‘நம் ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிரிகள் சிலர், நமக்கு எதிரான, ‘ஸ்டிங் ஆப்பரேஷன்’ எனப்படும் வீடியோ ஆதாரங்களை திரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அமைச்சர்களும், நம் கட்சி நிர்வாகிகளும் கவனமாக இருக்க வேண்டும்...’ என்றார். சிவகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர் பதில் அளிக்காத நிலையில், குமாரசாமி பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், ‘சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்காக, அவருக்கு எதிராக சில வீடியோ ஆதாரங்களை திரட்டிய சிவகுமார், காங்கிரஸ் மேலிடத்தில், ‘போட்டு’ கொடுத்தார். ‘அதனால் தான், சித்தராமையாவின் முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தனக்கு எதிராக யாரும் வீடியோ ஆதாரங்களை உருவாக்கி விடுவரோ என்ற பயத்தில், சிவகுமார் திடீரென இப்படி குற்றஞ்சாட்டுகிறார்...’ என்றார். சிவகுமார் தரப்போ, ‘குமாரசாமிக்கும் இந்த பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்? அவரை கர்நாடக மக்கள் மறந்து விட்டனர். இப்போது மீண்டும் மக்களிடம் தன்னை ஞாபகப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாமல் உளறுகிறார்...’ என்கிறது.