உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  மீண்டும் மீண்டும் பதவியா?

 மீண்டும் மீண்டும் பதவியா?

'அரசியல்வாதிகளுக்கு பதவி ஆசை மட்டும் போகவே போகாது போலிருக்கிறது...' என, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் குறித்து கிண்டல் அடிக்கின்றனர், அம்மாநில மக்கள். காங்கிரசில் பல முக்கிய பதவிகளை வகித்தவர், கமல்நாத். முன்னாள் பிரதமர்களும், மறைந்த காங்கிரஸ் தலைவர்களுமான இந்திரா, ராஜிவ் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் மேலிடத்தில், கமல்நாத்துக்கு நல்ல செல்வாக்கு உண்டு. ஆனால், 2023ல் நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து, கமல்நாத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது அவருக்கு, 79 வயதாவதால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு பதவி ஆசை வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து, அடுத்த மாதம் மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ம.பி., சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின்படி, ஆளும் கட்சியான பா.ஜ., இரண்டு எம்.பி.,க்கள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரு எம்.பி., பதவியை பெற முடியும். இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் தன்னை எம்.பி.,யாக தேர்வு செய்யும்படி, அந்த கட்சியின் மேலிடத்துக்கு கமல்நாத் நெருக்கடி கொடுத்து வருகிறார். ம.பி., காங்கிரசில் உள்ள இளம் நிர்வாகிகளோ, 'கமல்நாத்துக்கே மீண்டும் மீண்டும் முக்கிய பொறுப்புகளை கொடுத்தால், நாங்கள் வேறு கட்சிக்கு தாவுவதை தவிர வேறு வழியில்லை...' என, விரக்தியுடன் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி