'இவரை ஆரம்பத்திலேயே தட்டி வைத்திருக்க வேண்டும்...' என, ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சி தலைவருமான, நடிகர் பவன் கல்யாண்பற்றி புலம்புகின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர்.ஆந்திராவில், முதல்வர்சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் ஜன சேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. நம்ம ஊர் விஜய் போல, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர், பவன் கல்யாண்.கடந்த சட்டசபை தேர்தலில், தெலுங்கு தேசம்கட்சியுடன் கூட்டணி அமைத்து, 21 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன சேனா கட்சி, அனைத்திலுமே வெற்றி பெற்றது. இதனால், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தார், சந்திரபாபு நாயுடு.பவன் கல்யாண், எதிர்க்கட்சியினரை கடுமையாகதாக்கிப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை மட்டுமே தாக்கிப் பேசி வந்த அவர், இப்போது கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மீதும், தன் தாக்குதலை துவக்கியுள்ளார்.ஆந்திர மாநில உள்துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த பெண் தலைவருமானஅனிதாவை, 'சரியாக செயல்படவில்லை' என கூறி, பொதுக் கூட்டத்தில் சரமாரியாக தாக்கிப் பேசினார்.இது, தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் மனிதனை கடித்த கதையாக, இப்போது நம் கட்சியினரையே விமர்சிக்கிறாரே; இது கூட்டணிக்கு அழகல்ல...' என, ஆவேசப்படுகின்றனர்.