‘இது நியாயமில்லை!’
‘காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, நான் எப்படி பொறுப்பேற்க முடியும்...?’ என புலம்புகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. காலநிலை மாற்றத்தால் பசிபிக் கடலின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிப்பதை, ‘எல் – நினோ’ என, அழைக்கின்றனர். இதனால், உலகம் முழுக்கவே கடும் வெப்பம், வறட்சி, அதீத மழை, புயல், பெரு வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் தாக்கத்தால் விவசாயம் பொய்த்து, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும். இந்த பாதிப்பால் நம் நாட்டிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆந்திராவில் விலைவாசி அதிகரித்துள்ளதை கண்டித்து, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார். ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத சந்திரபாபு நாயுடு, முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்...’ என வலியுறுத்தி வரும் அவர், இதற்காக தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடுவோ, ‘எல் – நினோ பாதிப்பு ஆந்திராவில் மட்டும் இல்லை; எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு ஆட்சியாளர்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயம்...?’ என கேள்வி எழுப்புகிறார்.