எச்சரிக்கை மணி!
'கட்சிக்குள் நடக்கும் விவகாரங்கள், நாளுக்கு நாள் பெரிதாகி வருகின்றன. எதுவும் நல்லதாக படவில்லை...' என கவலைப்படுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ., நிர்வாகிகள். உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கேசவ் பிரசாத் மவுர்யா, பிரஜேஸ் பதக் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், இவர்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவின. ஆனால், இருவரும் இதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தான், சமீபத்தில் அயோத்தியில் தீபாவளியை ஒட்டி நடந்த தீப உற்சவ நிகழ்ச்சியில், இருவரும் பங்கேற்காமல் தவிர்த்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தீப உற்சவ விழா விளம்பரங்களில், துணை முதல்வர்கள் இருவரது படங்களும் இடம்பெறவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து, இருவருக்கும் முறையான அழைப்பும் இல்லை. இதன் பின்னணியில் முதல்வர் இருப்பதாக இருவரும் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தனர்...' என்கின்றனர் அவர்களது ஆதரவாளர்கள். 'எது எப்படியோ... 2027ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்குள் கோஷ்டி பூசலை மேலிட தலைவர்கள் சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் ஆட்சியை தக்க வைப்பது சிரமம்...' என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.