வசுந்தராவின் எதிரி யார்?
'இரண்டு முறை முதல்வராக பதவி வகித்தவராயிற்றே; அவ்வளவு சீக்கிரம் பதவி ஆசை போய்விடுமா என்ன...' என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.ராஜஸ்தானில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும், வசுந்தரா தான் முதல்வராவார் என, கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் நினைத்தனர். வசுந்தராவும், மலைபோல் நம்பிக்கை வைத்திருந்தார்.ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மாவை முதல்வராக நியமித்தது பா.ஜ., மேலிடம். இதை ஜீரணிக்க முடியாத வசுந்தரா, தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் விலகி இருந்தார்.சமீபகாலமாக அவரதுநடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது. சமீபத்தில், தன் 72வது பிறந்த நாளை மாநிலம் முழுதும் கோலாகலமாக கொண்டாடும்படி, ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார்.ராஜஸ்தானில், இந்தியா - பாக்., எல்லையில் உள்ள ஜெய்சால்மருக்கு சென்று, எல்லை பாதுகாப்பு படையினருக்கு இனிப்பு வழங்கி, பிறந்த நாளை கொண்டாடினார். அங்குள்ள பிரபலமான அம்மன் கோவிலுக்கு சென்று, மனம் உருக வழிபாடு செய்தார். இந்த கோவிலில் வேண்டுதல் நடத்துவோருக்கு, எதிரிகளே இல்லாமல் போய் விடுவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு.'வசுந்தரா, பாகிஸ்தான் எதிரிகளை அழிக்க வேண்டும் என வேண்டினாரா அல்லது தான் முதல்வர் பதவியை அடைவதற்கு தடையாக இருப்பவர்களை அழிக்க வேண்டும் என வேண்டினாரா...?' என்று கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள மக்கள்.