சரத் பேச்சு ஓட்டாக மாறுமா?
'வழக்கமாக அரசியல்வாதிகள் எடுக்கும் உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தை இவரும் கையில் எடுத்துள்ளார்...' என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் பற்றி கூறுகின்றனர், மஹாராஷ்டிரா மாநில மக்கள்.இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.சரத் பவாரின் உறவினரும், கட்சியில் அவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தவருமான அஜித் பவார், கட்சியை இரண்டாக உடைத்து, பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்களுடன், ஆளும் கூட்டணியில் கடந்தாண்டு ஐக்கியமாகி விட்டார். மஹாராஷ்டிராவில், இம்மாதம், 20ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், உண்மையான தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் சரத் பவார் பக்கம் இருக்கின்றனரா அல்லது அஜித் பவார் பக்கம் இருக்கின்றனரா என நிரூபிக்க வேண்டிய கட்டாயம், இருவருக்குமே ஏற்பட்டுள்ளது.இருவரும் எதிரெதிர் அணிகளில் இருப்பதால், பிரசாரத்தில் அனல் பறக்கிறது. தேர்தலில் சரத் போட்டியிடவில்லை. எனினும், 'இந்த தேர்தலுக்கு பின், தீவிர அரசியலில் இருந்து விலகி விடுவேன். எனக்கு, 83 வயதாகி விட்டது. இதற்கு மேலும் அரசியலில் இருப்பது சரியாக இருக்காது...' என, ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், மறக்காமல், உருக்கமாக பேசி வருகிறார், சரத் பவார்.மஹாராஷ்டிரா மக்களோ, 'சரத் பவாரின் இந்த, 'சென்டிமென்ட்' ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர்.