எண்ணம் ஈடேறுமா?
'கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர், இப்போது வேலையை காட்டத் துவங்கி விட்டார்...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி பேசுகின்றனர், அங்குள்ள பா.ஜ.,வினர். மத்திய பிரதேசத்தில், இவருக்கு முன் முதல்வராக இருந்தவர், சிவ்ராஜ் சிங் சவுகான். 2023 இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றதும், 'சவுகான் தான் மீண்டும் முதல்வராவார்' என்ற எதிர்பார்ப்பு இருந்தது; ஆனால், புதுமுகமான மோகன் யாதவுக்கு அந்த பதவியை கொடுத்தது, பா.ஜ., மேலிடம். இதனால், அதிருப்தியில் இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானை, மத்திய அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தியது, பா.ஜ., மேலிடம். சவுகான் முதல்வராக இருந்தபோது, 'அன்பு சகோதரி' என்ற திட்டத்தை அமல்படுத்தினார். இதன்படி மாநிலத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, மாதந்தோறும், 1,250 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக உள்ள மோகன் யாதவ், இந்த உதவித் தொகையை, 1,500 ரூபாயாக அதிகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். மேலும், 'அன்பு சகோதரி' என்பதற்கு பதிலாக, பகவான் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்ரா பெயரில், 'சுபத்ரா தேவி திட்டம்' என பெயர் மாற்றியும் அறிவித்தார். இந்த விவகாரம், ம.பி., -- பா.ஜ.,வில் உள்ள சவுகான் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'சவுகானின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியில், மோகன் யாதவ் இறங்கியுள்ளார்; ஆனால், அவரது எண்ணம் ஈடேறாது...' என, ஆவேசப்படுகின்றனர்.