'மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம் என்றால், அது முடியாது போலிருக்கிறதே...' என கவலைப்படுகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடு, முதல்வர் பதவியில் அமர்ந்து ஓராண்டுக்கு மேலாகும் நிலையில், மக்களிடம் தன் திட்டங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை அறிய, ஒரு ஆய்வு நடத்தினார். மாநிலத்தில் உள்ள, 49 சதவீத மக்கள், அரசு மீது அதிருப்தியில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்தது. சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில், இந்த அதிர்ச்சி தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடுவே வெளியிட்டார். 'ஆந்திராவை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவதற்கு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை முதலீடு செய்ய வைத்துள்ளோம். ஆனால், சாதாரண மக்களின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது. தனிப்பட்ட முறையில் அரசிடமிருந்து சலுகை அல்லது பயன்களை எதிர்பார்க்கின்றனர்...' என, கவலையுடன் தெரிவித்தார், சந்திரபாபு நாயுடு. அதிகாரிகளோ, 'இலவச பஸ் பயணம், இலவச காஸ் என்று கொடுத்து, மக்களை அதற்கு அடிமையாக்கிவிட்ட பின், முதலீடு, வளர்ச்சி என்றெல்லாம் பேசினால், அவர்களால் அதை ரசிக்க முடியவில்லையே...' என, புலம்புகின்றனர்.