| ADDED : ஆக 30, 2011 07:43 PM
மணலின் மறுசுழற்சி
மழையின் பயனை முழுமையாகப் பெற வேண்டுமெனில், நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். எந்த ஒரு நீர் நிலையில் குளித்தாலும், அதில் மூன்று கைப்பிடி மண்ணை எடுத்து கரையில் வைத்து விட்டு குளிக்க வேண்டும் என்பது, முன் இந்து சமயத்தில் நம்பிக்கையாக இருந்தது. காலப் போக்கில் இந்த வழக்கம் மறைந்து விட்டது. தற்போது சாதுக்களும், சன்னியாசிகளும் மட்டும் இந்த வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். இயற்கையான, இயல்பான தூர்வாரும் பணியாக இந்த நம்பிக்கை இருந்தது. அணைகளில் தூர் வார இயந்திரங்கள் தேவை. அணைப் பகுதிகளில் மணல் ஆக்கிரமித்தால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரின் அளவு குறையும். அணைக்கட்டுகளில் தூர் வாரப்பட்ட மணலை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம். தற்போது செங்கல் தயாரித்தல், கட்டடப் பணிகள், புதிய கட்டடங்களில் அடித்தளத்தை நிரப்புதலுக்கும் பயன்படுத்துகின்றனர்.
தகவல் சுரங்கம்
ஐதராபாத் ஸ்பெஷல்
ரம்ஜான் நோன்பு திறக்கும் நேரத்தில் ஐதராபாத்தில் கிடைக்கும் உணவுப் பொருளான 'ஐதராபாத் ஹலீம்' ஐதராபாத் பிரியாணியைப் போன்றே புகழ் பெற்றதாகும். இந்த 'ஐதராபாத் ஹலீம்' புவியியல் குறியீட்டு எண்ணைப் பெற்று உள்ளது. ஹலீம் என்ற சொல்லுக்கு, பொறுமை என்பது பொருளாகும். இதனைப் பொறுமையாக 10 மணி நேரங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும் என்பதால், 'ஹலீம்' என்றே பெயர் சூட்டப் பட்டது. மிகக் குறைந்த வெப்ப நிலையில் மிகப் பக்குவமாகத் தயாரிக்க வேண்டும். கோதுமை மாவு, தயிர், வெங்காயம், காய்கறிகள், சிறிதளவு மட்டன் ஆகியவை இதன் மூலப்பொருட்கள் ஆகும். ஐதராபாத்தில் சார்மினார் தெருக்களில் எப்போதும் ஹலீம் கிடைக்கும் என்றாலும், நோன்பு கால ஹலீமே புகழ் பெற்றதாகும். தமிழகத்தில் நோன்பு கஞ்சியைப் போல, ஐதராபாத்தில் ஹலீம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.