எரிமலை சுற்றுலா
எரிமலை என்றாலே பயப்படுகின்றோம். ஆனால் ஜப்பானில் எரிமலை உள்ள பகுதிக்கு, எரிமலை சுற்றுலா என்ற பெயரில் 'திரில்லிங்'கான பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். ஜப்பானில் பூஜி மலையில், ஓர் எரிமலை உள்ளது. இந்த எரிமலை அமைதியாக இருப்பதாகக் கருதி, தூங்கும் எரிமலை என பெயர் வைத்தனர். ஆனால் இந்த எரிமலை குறித்து நடைபெற்ற ஆராய்ச்சிகள் இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற ஆராய்ச்சி முடிவைத் தந்துள்ளன. எனவே தூங்கும் எரிமலை என்ற பெயரை தற்போது நீக்கி விட்டனர். தூங்காத எரிமலை உள்ள பூஜி மலை உச்சி வரை சுமார் 3 ஆயிரத்து 800 மீட்டர் உயரம் வரை சென்று, சூரிய உதயத்தைப் பார்ப்பது ஜப்பானில் 'திரில்லிங்' சுற்றுலாவாக உள்ளது.
தகவல் சுரங்கம்
அகில இந்திய சர்வோதய மாநாடு
காந்தியடிகள் மறைந்த 40 நாட்களுக்கு பின், நேரு, வினோபா, ராஜேந்திர பிரசாத், ஜெயப் பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட அன்றைய காந்தியத் தலைவர்கள் அனைவரும், மகாராஷ்டிராவில் சேவாகிராமில் ஒன்று கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.அப்போது தான் அனைத்து காந்திய அமைப்பு களும் இணைந்து 'சர்வோதய சமாஜ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுக்கு ஒரு முறை கூடிப்பேசி விவாதித்து தங்களுடைய அனுபவங் களை, சக சர்வோதய அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
முதல் அகில இந்திய சர்வோதய சம்மேளனம், 1949 மார்ச்சில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் இந்தூரில் நடந்தது. 43வது சர்வோதய சமாஜ் மாநாடு கவுகாத்தியில் சென்ற ஆண்டு நடந்தது. 44வது சர்வோதய மாநாடு டிசம்பர் 29, 30, 31ல் மதுரையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் காஞ்சிபுரத்திலும், மன்னார்குடியிலும் அகில இந்திய சர்வோதய சமாஜ் சம்மேளனம் நடைபெற்றுள்ளன.