உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛தினமலர் நாளிதழ் பவள விழா :இன்று இனிய தொடக்கம்

‛தினமலர் நாளிதழ் பவள விழா :இன்று இனிய தொடக்கம்

சென்னை : முழுக்க முழுக்க மக்களின் சேவைக்காகவும், தேச நலனுக்காகவும், 1951ம் ஆண்டு இதே நாளில், மிகச்சிறந்த சமூக சிந்தனையாளரும், அறிஞருமான டி.வி.ராமசுப்பையரால், கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்ட, 'தினமலர்' நாளிதழ் இன்று, தன் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டி.வி.ராமசுப்பையர், 'வியர்வை சிந்தியும், வலிகளை அனுபவித்தும் செல்வம் ஈட்டுவதன் நோக்கமே, தேவைஉள்ளவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் அதன் மூலமாக சேவை செய்வதற்காகத் தான்' என்று கூறினார். அந்த உயரிய நோக்கத்தால், 3,000 பிரதிகளுடன் துவக்கப்பட்ட 'தினமலர்' நாளிதழ் இன்று, பல கோடி வாசகர்களை தினமும் சென்றடைகிறது. தேசியம், தெய்வீகம் ஆகிய இரு கொள்கைகளையும் சிரமேற்கொண்டு சீரிய நடைபோடுகிறது. மக்களின் சிந்தனையை, 'தினமலர்' பிரதிபலிக்கிறது என்பதற்கான அங்கீகாரம் இது என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், மிகவும் நம்பகமான, உண்மையை வெளிக்கொணரும் செய்திகளை வெளியிடுகிறது. தொழில் முனைவோர், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், சாமானியர்கள் என அனைத்து தரப்பினரும், அவரவர் வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இந்நாளிதழ் விளங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்பு கூறியதாவது: முதல் தலைமுறையிலிருந்து, மூன்றாம் தலைமுறை வரை, 'தினமலர்' நாளிதழுக்கான வாசகர்கள் தினமும் பெருகி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எட்டு ரூபாய் கொடுத்து, 'தினமலர்' நாளிதழ் வாங்கும் வாசகர்கள் தான் எங்கள் முதலாளிகள் என்ற எண்ணம் சிறிதும் சிதறாமல் பணியாற்றி வருகிறோம். 'பல கோடி வாசகர்களை பெற்றுள்ள 'தினமலர்' நாளிதழ், நிறுவனரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், என்றென்றும் பணியாற்றும்' என, அதன் முன்னாள் ஆசிரியரும், என் தந்தையும், என்றும் நினைவில் நிற்பவருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். நிறுவனர் டி.வி.ஆர்., மகன்களின் நல்லாசியுடன், 'தினமலர்' பீடுநடை போட, அவர்களின் வாரிசுகள் அனைவரும் உழைப்போம்.

மகிழ்ச்சி

'தினமலர்' வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும் வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், விளம்பரதாரர் களுக்கும் நன்றி தெரிவித்து, பவள விழா கொண்டாட்டத்தின் இனிய தொடக்கத்திற்கான மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ManiMurugan Murugan
செப் 06, 2025 23:01

தினமலர் சேவை தொடர வாழ்த்துகள்.ஸ்தாபகர் மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் சேவை வளர வாழ்த்துக்கள்.


Tamilan
செப் 06, 2025 13:24

தன்னை 75 ஆண்டுகாலம் அர்பணித்துக்கொண்ட தினமலர் தமிழகத்தை தவிர குஜராத்தில் கூட காலூன்ற முடியாதது ஏன் ?


SP
செப் 06, 2025 13:04

ஒரு செய்தி உண்மையா? தவறான செய்தியா? என்று அறிந்து கொள்வதற்கு ஒரு வழி, அந்த செய்தி தினமலரில் வந்திருந்தால் உண்மையான செய்தி. வரவில்லை என்றால் தவறாக செய்தியாக இருக்கும் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல ஸ்ரீஅண்ணாமலையார் துணை இருப்பார் வாழ்க வளமுடன்.


T.S.SUDARSAN
செப் 06, 2025 12:14

நாளை காலை தினமலர் படிக்கும் போது ஒருவித புத்த உணர்ச்சி கிடைக்கிறது. உண்மையின் உரைகல். மேலும் மேலும் வளர வாழத்துக்கள்.


Renganathan Nagarajan Iyer
செப் 06, 2025 12:01

மகிழ்ச்சி அளிக்கிறது.வாழ்க பல்லாண்டு காலம்


Rajagopal Natarajan
செப் 06, 2025 11:34

வாழ்த்துக்கள்


KOVAIKARAN
செப் 06, 2025 10:59

நான் தற்போது கோவையில் வசித்து வருகிறேன். எங்கள் பூர்விக ஊர், கோவில்பட்டிக்கு அருகில், அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் தாலுகாவில் இருந்தது. நான் 1966 ஆம் ஆண்டு, SSLC தேர்வில் வெற்றிபெற்றபின் திருநெல்வேலி மாவட்ட Employment Exchange-ல் பதிவு செய்துவிட்டு, இரவு அங்கே தங்கவேண்டியிருந்ததால், ஒரு சினிமா அரங்கிற்குச் என்று நடுஇரவு காட்சி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல புறப்பட்டபோது, அங்கே, தியேட்டருக்கு வெளியே, பஸ்ஸ்டாண்டிற்கு வெளியே மற்றும் உள்ளே, தினமலர் விற்பதற்கு அங்கங்கே சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததையும், மக்கள் வரிசையில் நின்று தினமலர் பத்திரிக்கை வாங்கிக்கொண்டு செல்வத்தையும் பார்த்தேன். அப்போது நேரம் அதிகாலை மணி 2.00. அன்றுதான் முதன்முதலில் நான் தினமலரை வாங்கிப் படித்தேன். அப்போது 1966 -ல் தினமலர் திருநெல்வேலி பதிப்பு ஒன்று தான் இருந்தது அன்று ஆரம்பித்த எனது தினமலர் வாசிக்கும் பழக்கம், இன்று பவள விழா கொண்டாடும் தினம் வரையும் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் அமெரிக்காவிற்கு இதுவரை ஆறு முறை சென்று வந்துள்ளேன். அங்கே நண்பகல் 12 - 1.00 மணி அளவில், அப்போது இங்கே நமது நாட்டில் மணி அடுத்த நாள் காலை 4.00 மணி இருக்கும். என்னுடைய Laptop ல் இன்டர்நெட்டில் தினமலர் படித்துவிட்டுத்தான் மத்திய உணவே அருந்துவேன். அந்த அளவிற்கு நான் தினமலருக்கு அடிமையாகிவிட்டேன் என்பதில் நான் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நமது மாகாணத்தில் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் குற்றம் குறைகளை அஞ்சாமல் எங்கள் பத்திரிக்கையான தினமலர் மூலம் தெரிவிப்பதால், அன்றைய அரசும், இன்றைய அரசும் அவர்களது விளம்பரங்களை தினமலருக்கு கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால், தினமலருக்கு ஏற்பட்ட வருமான இழப்பு ஏராளம். ஆனால், எங்களுக்கு பணம் முக்கியமில்லை, உண்மையை உரக்கச் சொல்லுவதே முக்கியம் என்று எண்ணி, இன்று வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுவே தினமலர் உண்மையின் உரைகல் என்று வாசகர்களால் பெருமையகாக அழைக்கப்படுகிறது. மற்றொரு விஷயமும் இங்கே குறிப்பிட வேண்டும். மற்ற பத்திரிக்கைகள் சினிமாவிற்கும், நடிகர்- நடிகைகளுக்கும் முக்கியம் கொடுத்து பல பக்கங்களை ஒதுக்கி, வாசகர்ளை முகம் சுளிக்க வைப்பது ஒன்றை தினமலர் தினமும் செய்வதில்லை. ஞாயிறு வாரமலரில் வரும் சிறுகதைகள், தொடர்கதைகள், அந்துமணி கேள்வி-பதில்கள் அந்துமணியின் கட்டுரைகள், என பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். சிறுவர்மலர், ஆன்மிக மலர் என்று பலவகையான இணைப்புகளால் கட்டப்பட்ட மலர்மாலையை அணிந்துகொண்டு வீறு நடை போட்டு நடந்து வந்து இன்று 75 வயது பவள விழா கொண்டாடும் தினமலர் நிறுவனரின் வழித்தோன்றல்களுக்கும், திணமலர் வெற்றிக்கு உழைத்து வந்த இன்றும் உழைத்துக்கொண்டிருக்கும் அனைவருக்குக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த பூமி உள்ளவரை தினமலரும் இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.


அ. மயில்சாமி சூலூர்
செப் 06, 2025 10:34

தமிழ் ஊடக உலகில் நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு, பொதுநலன் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் தினமலர் நாளிதழ் இன்று 75ஆம் ஆண்டை எட்டியுள்ளது என்பது பெருமைக்குரிய நிகழ்வு. 1942ஆம் ஆண்டு தொடங்கி, செய்திகளை நேர்மையாக வெளிப்படுத்தும் பணியில் தினமலர் பத்திரிகை தன்னிகரில்லாத பங்காற்றி வருகிறது. வாசகர்களின் நம்பிக்கையைச் சுமந்துவரும் இந்த ஊடகம், தலைமுறைகள் பலருக்கு அறிவும் விழிப்புணர்வும் ஊட்டியிருக்கிறது. செய்திகள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியம், கலாச்சாரம், சமூகம் ஆகிய துறைகளிலும் தனித்துவமான பங்களிப்பை செய்துள்ளது. இன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த வரலாற்று நாளில், தினமலர் பத்திரிகைக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். வருங்காலத்திலும் உண்மையும் நேர்மையும் வழிகாட்டும் ஒளிக்கதிராக தொடர்ந்து விளங்க வாழ்த்துக்கள் “தினமலர் என்றுமே வாசகர்களின் இதயத்தில் மலரட்டும்”


A.Kennedy
செப் 06, 2025 09:52

தினமலர் 75ம் ஆண்டில் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களும், தினமலர் மென்மேலும் வளர்ந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும், வாழ்த்துக்கள் பல.


Palanisamy Sekar
செப் 06, 2025 08:41

எழுபத்தைந்தாண்டுகள் என்பது சாதாரணமாக கடந்துவந்துவிட முடியாது. அதற்க்கென ஒரு திறமையும் அர்ப்பணிப்பு கொள்கையும் வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எவ்வளவோ பத்திரிக்கைகள் வந்தன போயின என்றிருந்த காலத்தில் எவ்வளவோ அடக்குமுறைகளை தாண்டி எவருக்கும் அஞ்சாத சிங்கமென துணிச்சலோடு பயணித்த ராமசுப்பு அவர்களின் தியாகம் தினமலர் இந்த அளவுக்கு தொடர்ந்து பயணிக்கின்றது வெற்றிகரமாக. தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் ஆக்கிரமித்த இந்த காலகட்டத்தில் அவற்றையெல்லாம் கடந்து இன்றைக்கு ஒவ்வோர் வீடுகளிலும் தினமலர் மணம் வீசிக்கொண்டுள்ளது என்றால் அது அவ்வளவு சாத்தியமில்லை. பிரமிப்பாக இருக்கிறது. சுலபமாக சொல்லிவிடலாம் எழுபத்தைந்தாண்டு காலம் என்று. ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு துயரங்களும் துன்பங்களும் கரடுமுரடான சம்பவங்களையும் கடந்து ஆட்சியாளர்களின் எச்சரிக்கைகளை மிரட்டல்களை தாக்குதல்களை எல்லாம் கடந்து வெற்றிநடை போடுகின்றது என்றால் அது தினமலரின் தனித்துவம். பாரதியின் துணிச்சல் தினமலரில் கொஞ்சம் கூடுதலாக காண்கின்றோம். கும்பல்கள் கூட தினமலரை எதிர்த்து கச்சைக்கட்டி நின்ற சம்பவங்களையெல்லாம் கண்டிருக்கின்றேன். ம்ம்ம் அசைந்துகொடுக்கவில்லையே. யாருக்கும் அஞ்சோம் என்று துள்ளி நடைபோட்டது தினமலர் மட்டுமே. சாதி சாயம் பூசி மிரட்டி பார்த்தார்கள். ஆனால் தினமலரோ அதையெல்லாம் துச்சமென தூர தூக்கி எரிந்து இன்றைக்கு பவளவிழா கொண்டாடுகின்றது என்றால் அதன் வாசகர்கள் எந்த பத்திரிகைக்கும் இல்லாத அளவுக்கு பெருகிக்கொண்டே வருகின்றார்கள். இணையதளத்தில் ஒரே ஹீரோ நம்ம தினமலர் மட்டும்தான். பவளவிழா மட்டுமல்ல இன்னும் பொன்விழா வைரவிழா என்று மென்மேலும் கொண்டாடும் தினமலருக்கு பல்லாண்டு வாசகர் என்கிற வகையில் வாழ்த்துகின்றேன் பெருமையோடு. தினமலரில் பணிபுரிகின்ற அத்துணை தொழில்நுட்ப அறிஞர்களுக்கும் ஆசிரியர்கள் குளுமைத்திருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தொடரட்டும் உங்களின் சீரியப்பணி அடுத்து நாட்டில் நடக்கும் அத்துணை அரசியல் மாற்றத்திற்கும் உங்களின் பங்கு வெகுவாக இருக்கும் என்பதை இப்போதே சொல்லிக்கொள்கின்றேன். தினமலர் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருக்கும் அருமையான புதுமலர். வாழ்த்துக்கள்


முக்கிய வீடியோ