உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / கவுத்தி மலையை காப்பாற்றியது தினமலர்

கவுத்தி மலையை காப்பாற்றியது தினமலர்

தினமலர், நடுநிலை நாளிதழ் என, என்றுமே தன்னைத்தானே போற்றிக் கொள்வதுமில்லை; தவறு செய்வோரை தட்டிக் கேட்காமல் விட்டதுமில்லை. 'டீ கடை பெஞ்ச்' பகுதியில், தன் பெயர் எப்போது வருமோ என, அஞ்சும் அதிகாரிகள் உண்டு. பிரசுரித்த தகவல் தவறு என தெரிய வந்தால், உடனடியாக அதை ஏற்று, பதிவிடும் நியாய உணர்வு, தினமலருக்கு உண்டு. செய்திகளில் துல்லியம், அச்சில் தெளிவு, செய்திகளுக்கு உரியவர்களின் படங்களை ஓவியமாகத் தருகிற நேர்த்தி என, கையிலெடுத்தால் படிக்கத் தூண்டும் சுவாரஸ்யங்களின் மறுபெயரே 'தினமலர்'. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், என் குடும்பத்தில் நடந்த துர்நிகழ்வு குறித்த செய்திகள், தினமலரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. எங்கள் மாவட்டத்தின் பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், ஒரு விளம்பரப் பேர்வழி. அவர், நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்ல, அது தினமலரில் பிரசுரமானது. அந்த செய்தியை படித்து நான் அதிர்ந்தேன். 'போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்' உடன் காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டேன். சில பல அர்ச்சனைகளுக்கு பின், அவர் மறுப்பு செய்தி தந்தார். அது தினமலரில் கட்டம் கட்டிய செய்தியாக வெளியானது. பிறகுதான் மனம் சற்றே ஆறுதலானது. கடந்த 2000 ஆம் ஆண்டுகளில், திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருந்த, கவுத்தி மலையில் இரும்புத்தாது இருப்பதைக் கண்டறிந்த, ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனம், இரும்புத்தாதுவை எடுக்க அரசிடம் அனுமதி கேட்டது. சேலம் பகுதியில், இதே போல் நடந்த முயற்சி, மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. திருவண்ணாமலை பகுதி மக்கள் சற்று சாந்தமானவர்கள் என்றும், அங்குள்ள சில அரசியல்வாதிகளை சரி செய்து விடலாம் என்றும் நம்பிய அந்த நிறுவனம், தனது முழு கவனத்தையும், திருவண்ணாமலையில் குவித்தது. தினமலரைத் தவிர மற்ற நாளிதழ்கள், இது குறித்த செய்திகள் கூடப் போடவில்லை. அந்த சமயத்தில், நான் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் ஆனேன். பன்னாட்டு நிறுவனம், அரசிடம் அனைத்து அனுமதிகளையும் வாங்கி இருந்தது. எனக்கு முன்பு கலெக்டராக இருந்தவரின் பரிந்துரையையும் பெற்றிருந்தது. கவுத்தி மலையிலிருந்து, 'துரிஞ்சலாறு' என்ற நதி உருவாகுகிறது. மலையில் இருந்து இரும்புத்தாதுவை எடுத்தால், நதி காணாமல் போய்விடும். சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்திற்கென்று, 60 நாட்கள் தான் தண்ணீர் தர முடிகிறது. கவுத்தி மலையில் இரும்புத்தாது எடுக்க, அதிகளவில் தண்ணீர் தேவை. இதனால், விவசாயத்துக்கான தண்ணீரை 40 நாளாக குறைக்க வேண்டியிருக்கும். பன்னாட்டு நிறுவனம் விரித்த வலையில், திருவண்ணாமலையிலும், செங்கத்திலும், சில திமிங்கலங்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிறுவனத்தின் முன்னெடுப்பில், அப்போது உச்சபட்ச அதிகாரத்தில் இருந்தவரின் குரலைக் கூட, இரண்டு முறை கேட்டேன். மற்ற நாளிதழ்கள், கவுத்தி மலை விஷயத்தில் அமைதி காத்தன. 'தினமலர்' மட்டும் தினமும் கவுத்தி மலை குறித்த செய்திகளை வெளியிட்டு, பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டது. மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினேன். கலந்து கொண்ட 670 பேரில், இரண்டு பெரும் புள்ளிகளைத் தவிர, அனைவரும் திட்டத்தை எதிர்த்தனர். அதை முறையாகப் பதிவு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பினோம். மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்தது. கவுத்தி மலை மட்டுமல்ல, திருவண்ணாமலை கோவிலை, இந்திய தொல்லியல் துறை கையகப்படுத்த முயன்றபோதும், தொடர்ந்து தினமலர் எதிர்த்து செய்தி வெளியிட்டதால், தொல்லியல் துறை திட்டத்தை கைவிட்டது. பெரும்பாலும் கோவில் தொடர்பான செய்திகளை, பல நாளிதழ்கள் பிரசுரிக்காமல் கடந்து போகின்றன. மக்களின் கவனத்தைக் கவரவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிகழ்வு என்று, சம்பந்தப்பட்டவர்களால் புரிந்து கொள்ளவும் 'கட்டம் கட்டி' செய்தி வெளியிடுவது என்ற, புதிய யுத்தியை தினமலர்தான் முதலில் நடைமுறைப்படுத்தியது. தினமலரில் 'கட்டம் கட்டியாச்சு' என்பதற்கு, நடவடிக்கை எடுத்தாகி விட்டது என்ற அர்த்தமும் வந்துவிட்டது. தனக்கென சிறப்புமிக்க வாசகர்களைக் கொண்ட 'தினமலர்', தனது பவள விழா ஆண்டில் பவனி வருவது குறித்து மகிழும் பலரில் நானும் ஒருவன். தினமலரின் வெற்றிப்பயணம் என்றென்றும் தொடர வாழ்த்துகிறேன். - முனைவர் மு.ராஜேந்திரன், ஐ.ஏ.எஸ்., (ஓய்வு) சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை