உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ரூ.3 கோடி மதிப்புள்ள ரிசர்வ் சைட் மீட்பு; மாநகராட்சி நகரமைப்பு பிரிவு நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி

ரூ.3 கோடி மதிப்புள்ள ரிசர்வ் சைட் மீட்பு; மாநகராட்சி நகரமைப்பு பிரிவு நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி

கோவை : கோவையில், ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, மாநகராட்சிக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான 'ரிசர்வ் சைட்', நமது நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக, நகரமைப்பு பிரிவினரால், நேற்று மீட்கப்பட்டது.கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 51வது வார்டில் கிருஷ்ணா நகர் உள்ளது. மொத்த பரப்பு ஏழு ஏக்கர்; 60 மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது; பொது ஒதுக்கீடு (ரிசர்வ் சைட்) இடமாக, 16 சென்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தையும், அருகாமையில் உள்ள இடத்தையும் சேர்த்து, 8,400 சதுரடிக்கு நிலத்தை வரன்முறைப்படுத்த, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவ்விடம் யாருக்குச் சொந்தம் என்பதை, நகர நில பதிவேடு ஆவணங்களை நகரமைப்பு பிரிவினர் சரிபார்க்காமல், வரன்முறை செய்து கொடுத்து விட்டனர். உடனே, அவ்விடத்தை சுற்றிலும் தகர ஷீட் மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஜமாபந்தி நிகழ்ச்சியில், கிருஷ்ணா நகரில் உள்ள பொது இட ஒதுக்கீடு மற்றும் கிணறு சம்பந்தமாக, அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, நகர நில பதிவேட்டில் பொது ஒதுக்கீடு என்பது தெரியவந்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை, மாநகராட்சி அதிகாரிகளே வரன்முறை செய்து கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதுதொடர்பான கோப்புகளை ஆய்வு செய்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கிய நோட்டீஸில் கூறியிருப்பதாவது:கோவை மாநகராட்சி, 51வது வார்டு உப்பிலிபாளையம் கிராமம், க.ச., எண்: 134/ 3, நகரளவை வார்டு எண்: 32, பிளாக் எண்: 49, நகரளவை எண்: 38 என்பது, கோவை மாநகராட்சி நகரளவை பதிவேட்டின் படி, கிருஷ்ணா நகர் பொது இடம் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம். இங்குள்ள ஆக்கிரமிப்பு குறித்து நகரமைப்பு அலுவலர் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்திருக்கிறார்.அதில், 1983ல் மனைப்பிரிவு உரிமையாளர்களால் பொது இடம் என ஒப்புக்கொள்ளப்பட்ட இடம்; 2007ல் முறைகேடாக வரன்முறை உத்தரவு பெறப்பட்டு, விற்கப்பட்டு, சட்டத்துக்கு புறம்பாக கிரையம் செய்யப்பட்டிருக்கிறது. 2006ம் ஆண்டு, டிச., 27ல் செல்வராஜ் என்பவருக்கு, 8,400 சதுரடி பரப்பு கொண்ட மனையை வரன்முறைப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவ்விடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்; தவறினால், மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்படும்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.நோட்டீஸ் வழங்கி ஒரு மாதமாகியும் ஆக்கிரமிப்பை அகற்றாததால், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர், நேற்று அவ்விடத்துக்குச் சென்று, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, அவ்விடத்தில் இருந்த தகர ஷெட் மறைப்பு மற்றும் கட்டடத்தை இடித்து, 'மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை