| ADDED : ஏப் 26, 2024 01:17 AM
மதுரை : தினமலர் செய்தி எதிரொலியாக மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., வாய்மொழி தேர்வுக்கு (வைவா ஓஸ்) சிண்டிகேட் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் டி.ஆர்.பி., உதவி பேராசிரியர்கள் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இருந்த தடை நீங்கியது.இப்பல்கலையில் இந்தாண்டு பிஎச்.டி., படிப்புக்கான வாய்மொழி தேர்வு முடிந்த நிலையில் சிண்டிகேட் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் தற்காலிக சான்றிதழ் பெற முடியாத மாணவர்கள், டி.ஆர்.பி., அறிவித்துள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கு தகுதி இருந்தும் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக உயர்கல்வி செயலாளரிடம் அனுமதி பெற்ற துணைவேந்தர் குமார், சிண்டிகேட் ஒப்புதல் அளிக்கும் வாய்மொழி தேர்வுக்கான தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களுக்கு அனுப்பி (சர்குலர்) கையெழுத்து பெறும் நடவடிக்கையை நேற்று துவக்கினார்.மேலும் வாய்மொழி தேர்வை நிறைவு செய்த 196 மாணவர்களுக்கும் தற்காலிக சான்றிதழ்கள் (புரவிஷனல்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மெஜாரிட்டி உறுப்பினர்கள் கையெழுத்து பெற்ற பின் இன்று (ஏப்.,26) மாணவர்கள் அனைவருக்கும் அந்த சான்றிதழ் வழங்க பல்கலை தயார் நிலையில் உள்ளது. டி.ஆர்.பி., தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.,29 கடைசி நாள் என்பதால் அதற்குள் சான்றிதழ் பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.