அவிநாசி சாலையில் பராமரிப்பு பணி
அன்னுார்; தினமலர் செய்தி எதிரொலியாக அன்னுார் -அவிநாசி சாலையில் பராமரிப்பு பணி நடந்தது. அன்னுாரில், அவிநாசி சாலையில், அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் துவங்கி, சி.எஸ்.ஆர். நகர் பிரிவு, நாகமாபுதுார், பனந்தோப்பு மைல், சோமனுார் பிரிவு வரை சாலை பல இடங்களில் குழிகளுடன் உள்ளது. இந்த குழிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதை அடுத்து மாநில நெடுஞ்சாலை துறையினர், நேற்று குழிகள் உள்ள இடங்களில் பராமரிப்பு பணியை துவக்கினர். ஜல்லிக்கற்களை பரப்பி, தார் ஊற்றி குழிகளை சமன்படுத்தினர். பெரிய அளவிலான குழிகள் சமன்படுத்தப்பட்டன.