நெல் கொள்முதல் நிலையம் வெள்ளப்புத்துாரில் துவக்கம்
மதுராந்தகம்:வெள்ளப்புத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. வெள்ளப்புத்துார் ஊராட்சியில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக, 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் சொர்ணவாரி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை, நெற்களம் மற்றும் வீடுகளில் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக, எதிர்பாராத நேரங்களில் மழை பெய்து வருவதால், களத்துமேட்டில் உள்ள நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து வெள்ளப்புத்துாரில் நேற்று, கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் விஜயகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.