பிளக்ஸ்கள் அகற்றம்: ஓட்டுநர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி
வால்பாறை; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டன. வால்பாறையில், ரோடுகள் ஏற்கனவே குறுகலாக உள்ளன. இந்நிலையில், சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பிளக்ஸ் பேனர்கள் வைக்கின்றனர். குறிப்பாக தி.மு.க. - அ.தி.மு.க. - நா.த.க. - த.வெ.க. உள்ளிட்ட கட்சியினர் காந்திசிலை, அண்ணாசிலைகளை மறைந்து பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர். தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களை அகற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், நகரில் பல்வேறு இடங்களில் விதிமுறை மீறி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை போலீசார் அகற்றினர். இதனால், வாகன ஓட்டுநர்களும், உள்ளூர் மக்களும் நிம்மதியடைந்தனர்.