கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில் சிக்னல் சீரமைப்பு
திருப்போரூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில், 'சிக்னல்' சீரமைக்கப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில், திருவான்மியூர் மற்றும் மாமல்லபுரம் இடையேயான இ.சி.ஆர்., சாலையில், கோவளம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள கோவளம் இ.சி.ஆர்., சாலை சந்திப்பில், வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், போக்குவரத்து 'சிக்னல்' அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்த சிக்னல் செயல்படாமல் இருந்தது. இதனால் சென்னை, திருவான்மியூரிலிருந்து கோவளம், மாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் வரும் வாகனங்களும், கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம், மாமல்லபுரம் செல்லும் வாகனங்களும், தாறுமாறாக சென்றன. இதன் காரணமாக பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சாலையை கடப்பதற்கு சிரமப்பட்டனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்பட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.