அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன்: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60ல் இருந்து 62 ஆக உயர்த்த பரிசீலனை செய்வதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களில், 40 சதவீதம் பேர், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை வழங்குவதற்கான நிதி இல்லாததால்,தி.மு.க., அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக, அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. டவுட் தனபாலு: அது சரி... ஓய்வு வயது 58ஐ, பழனிசாமி 60 ஆக உயர்த்தினாரு...ஸ்டாலின் பங்குக்கு, 62 ஆக்க பார்க்கிறாரு... இப்படி மாற்றி மாற்றி வயது வரம்பை ஏத்தி, 'ஆயுள் முழுக்க அரசு பணியிலஇருக்கலாம்'னு சட்டம் கொண்டு வந்துடுவாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!ஆதி தமிழர் முன்னேற்ற கழகத் தலைவர் நாகராஜன்: அருந்ததியர் சமுதாயத்துக்கு தேவை 6 சதவீதம் உள் ஒதுக்கீடு. அ.தி.மு.க.,ஆட்சி அமையும்போது, எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என, பழனிசாமி தெரிவித்தார்.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அவர்களுக்கு தோதான அமைப்பை அழைத்து, தனக்கு தானே முதல்வர் பாராட்டை தேடிக் கொண்டார். டவுட் தனபாலு: அருந்ததியருக்கு, 3 சதவீத உள்ஒதுக்கீட்டை 2009ல் கருணாநிதி முதல்வரா இருந்தப்ப தந்தாரு...அதன்பின், 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., ஆட்சிதானே இருந்துச்சு... அப்ப எல்லாம், உங்களுக்கான ஒதுக்கீட்டை 6 சதவீதமா உயர்த்த பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அடித்தட்டு மக்கள் இலவசங்களுக்கு கையேந்தும் நிலையிலேயே இருக்க வேண்டும்; அவர்கள் அடிக்கடி மோதிக் கொண்டால் தான் நாம் நிம்மதியாக ஆள முடியும் என்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் மன நிலை. இதை விட மோசமான மனோபாவம் இருக்க முடியாது. எனவே, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக, அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம்ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். டவுட் தனபாலு: இப்ப, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுக்குறீங்க... தப்பித் தவறி, அரசாங்கம் அந்த கணக்கெடுப்பை நடத்தி முடிச்சு, அதுல நீங்க விரும்பியபுள்ளி விபரம் கிடைக்கலைன்னா, 'கணக்கெடுப்பில் குளறுபடி'ன்னு குற்றஞ்சாட்ட மாட்டீங்க என்பதை, 'டவுட்' இல்லாம சொல்ல முடியுமா?